பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை
ஒவ்வொரு ஜீவனும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகின்றது. பணம், பதவி, உடலுறவு எதுவாயினும் மகிழ்ச்சிக்காகவே அதில் ஈடுபடுகின்றீர்கள். சிலர் துன்பத்தினைக் கூட அது மகிழ்ச்சி தருவதால் சந்தோஷமாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.!
சந்தோஷமாக இருக்க நீங்கள் எதையோ தேடுகின்றீர்கள். ஆனால் அது கிடைத்த பின்னரும் சந்தோஷமாக இருப்பதில்லை. பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன், தான் கல்லூரிக்குச் சென்ற பின்னர் மேலும் சுதந்திரமாக ஆகி அதனால் மகிழ்ச்சியடைவேன் என்று எண்ணிக் கொள்கின்றான். சந்தோஷமாக இருக்கின்றாயா என்று ஒரு கல்லூரி மாணவனைக் கேட்டால், வேலை கிடைத்த பின்னர் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்று கூறுவான். நல்ல வேலையில் அல்லது தொழிலில் இருக்கும் ஒருவரிடம் பேசினால், முற்றிலும் சரியான ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்த பின்னரே மகிழ்ச்சியடைவேன் என்று கூறுவார். அத்தகைய துணையுடன் இருப்பவரைக் கேட்டால், ஒரு குழந்தை வேண்டும், அப்போது மகிழ்வடைவேன் என்பார். குழந்தைகள் இருப்பவரை மகிழ்வுடன் இருக்கிறீர்களா என்று கேட்டால், அவர், அது எப்படி முடியும், குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், நல்ல கல்வி கற்க வேண்டும், அவர்கள் சுயமாக நிற்க வேண்டும், அப்போதுதான் சந்தோஷம் என்பார். தங்கள் பொறுப்புக்களைஎல்லாம் நிறைவேற்றி, ஒய்வு பெற்று விட்டவர்களை மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள். அவர்கள் தங்கள் இளமைக் காலத்தினை எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பர்.
ஒருவரது வாழ்க்கை காலம் முழுவதுமே பின்னர் ஒரு நாள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஏற்பாடாகவே கழிகின்றது.. இது எவ்வாறெனில், இரவு முழுவதும் படுக்கையினைத் தயார் செய்து கொண்டிருந்து விட்டு, உறங்க நேரம் இல்லாதது போன்றதாகும். உங்கள் வாழ்க்கையில் எத்தனை நிமிஷங்கள், மணிகள், நாட்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியாகக் கழித்திருக்கின்றீர்கள் ? அந்த தருணங்கள் மட்டுமே நீங்கள் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்திருக்கின்றீர்கள். ஒரு வேளை, அது நீங்கள் சிறு குழந்தையாக முற்றிலும் பேரின்பத்துடன் இருந்தபோது, அல்லது நீங்கள் உலாவல், நீச்சல், படகோட்டுதல் அல்லது மலையேற்றம் போன்ற தருணங்களில் நிகழ் காலத்தில் முற்றிலும் வாழ்ந்து அனுபவித்த போது அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.
வாழ்க்கையை இரண்டு விதமாகக் காணலாம். ஒன்று, "ஒரு குறிக்கோளை அடைந்த பின்னர் நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று எண்ணுவது. இரண்டாவது, "என்னவாயினும் சரி ! நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று எண்ணுவது. இந்த இரண்டில் எப்படி நீங்கள் வாழ விரும்புகிறீர்கள் ?
வாழ்க்கையில் 80 சதவீதம் சந்தோஷம், 20 சதவீதம் துன்பம். ஆனால் நீங்கள் அந்த 20 சதவீதத்தையே விடாமல் பிடித்துக் கொண்டு, அதை 200 சதவீதமாக்கி விடுகின்றீர்கள் ! அது தெரிந்து செய்வதல்ல, அவ்வாறு நிகழ்ந்து விடுகிறது. நிகழ் தருணத்தில், மகிழ்ச்சி, கவனம், விழிப்புணர்வு, கருணை இவற்றுடன் வாழ்வது ஞானம். குழந்தையைப் போன்றிருப்பது ஞானம். உள்ளிருந்து விடுதலையாகி, அனைவருடனும் தடையின்றி சகஜமாகப் பழகுவது என்பதாகும்.
எதையும் தீர்ப்பாக எண்ணாதீர்கள், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்கள் என்ன நினைத்தாலும் அது நிலையானதல்ல. பிறரைப் பற்றிய உங்களது அபிப்பிராயங்களும் மாறிக் கொண்டே இருக்கும். எனவே ஏன் பிறர் என்ன உங்களைப் பற்றி நினைக்கின்றனர் என்று கவலைப் பட வேண்டும்? கவலைப் படுதல், உங்கள் உடல், மன , அறிவு, மற்றும் கவன நிலைகளைப் பாதிக்கும். அது உங்களை, உங்களிடமிருந்து வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லும் தடையாகும். அது பயத்தைக் கொடுக்கும். பயம் என்பது அன்பின்மையே ஆகும். அது ஒரு தீவிரமான தனிமையுணர்வு.
சில சுவாசப் பயிற்சிகளைச் செய்து உங்களைத் தளர்த்திக் கொள்வதன் மூலம் இதைக் கையாளலாம். அப்போது, நீங்கள் விரும்பப் படுவதை உணர்வீர்கள். அனைவரிடமும் நீங்கள் ஓர் பகுதியாக , இந்தப் பிரபஞ்சத்திலேயே ஓர் பகுதியாக இருப்பதை உணர்ந்தறிவீர்கள். இது உங்களை விடுதலையாக்கும், உங்கள் மனம் முற்றிலும் மாறி விடும். உங்களைச் சுற்றிலும் மிக அதிகமான நல்லிணக்கத்தினைக் காண்பீர்கள்.
நல்லிணக்கத்தினைக் கண்டறிய பல ஆண்டு காலம் எங்கேயோ அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டுமென்பதில்லை. எப்போதெல்லாம், அன்பு செலுத்துகின்றீர்களோ, அப்போதெல்லாம், உங்கள் மனம் நிகழ் தருணத்திலேயே இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். ஒரு கட்டத்தில், ஒரு அளவில், ஒவ்வொருவரும் தானறியாமலேயே தியானம் செய்து கொண்டிருக்கின்றனர். சில தருணங்களில் உங்கள் உடல், மனம், மூச்சு அனைத்தும் நல்லிணக்கத்தில் இருக்கின்றன. அதுதான் யோகநிலை. வாழும் கலை, நிகழ் தருணத்திலேயே உள்ளது.