மன அமைதிக்கு தியானம் (Meditation For Peace Of Mind in tamil)

எதிர்வினைக்குப் பதிலாக விடையளியுங்கள்

கொந்தளிப்பான நிலைமைகளில் உங்களுடைய மனதை கவனித்திருக்கின்றீர்களா? இத்தகைய கொந்தளிப்பான நிலைமை நமது உணர்ச்சிகளைத் தூண்டி விடும். உணர்ச்சிகள் மேலோங்கி இருக்கும்போது, அவசரமாக எதிர்வினையாற்றுவதே இயல்பாகும். மேலும் நாம் எளிதாக உணர்ச்சிகளினால் உந்தப் பட்டு, நிகழ் நேர விழிப்புணர்வை இழந்து விடுகிறோம். அடுத்து என்ன செயல்புரிய வேண்டும் என்பதை விடுத்து, ஏன் எனக்கு இவ்வாறு நிகழ்ந்தது என்ன செய்தேன் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம். எவ்வாறு எல்லாம் சரியாகும் என்னும் வருங்காலத்தினைப் பற்றிய கவலையும் பதட்டமும் நமக்கு ஏற்படுகின்றது. இத்தகைய எண்ணங்களின் இடைவிடாத தாக்குதலால், நாம் தெளிவாகச் சிந்திக்கும் திறனை இழந்து நிகழ்விற்குப் பதில்வினை புரிகின்றோமேயன்றி பதிலளிப்பதில்லை.

மனதை அசையாமல் இருக்கத் தயாராக்குங்கள்

கொந்தளிக்கும் மனதில் கட்டுப் படுத்த முடியாத எண்ணங்களினால் "ப்ராணா " என்றழைக்கப் படும் ஆற்றல் உரிஞ்சப் பட்டு, நம்மை முற்றிலும் களைப்பாகவும் விரக்தியுடனும் ஆக்கி விடுகின்றது. எனவே எவ்வாறு கொந்தளிப்பிலிருந்து அமைதிக்குச் செல்வது? அத்தகைய நிலைமைகளுக்கு எவ்வாறு அமைதியான மனதுடன் பதிலளிப்பது? " நாம் நேரிடையாக மன அமைதியை வலியுறுத்தவோ கோரவோ முடியாது, ஆனால் மனதை அசையாமல் இருக்கத் தயார் படுத்தலாம்" என்கிறார் மூத்த ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரான ஸ்ரீராம் சர்வோத்தம்.

முற்றிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

நம் மனதில் சேர்ந்துள்ள அழுத்தத்தினை தியானம் விடுவித்து, நம்மை புதிதாகவும் தெளிவாகவும் ஆக்குகின்றது. செயல்பாட்டிற்குறிய இந்த கணத்திற்கு மனதை அழைத்து வருகின்றது.பாருங்கள், நாம் நேற்றுப் புன்முறுவல் பூக்க முடியுமா? இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு புன்முறுவல் பூக்க முடியுமா? ஆனால் இப்போது புன்னகைக்கலாம்.அது நம் கையில் உள்ளது. நாம் முழு விழிப்புணர்வுடன் செயல்படும்போது,மனம் முற்றிலும் கவனத்துடன் இருக்கின்றது, அதனால் செயல் நிறைவாக அமைகின்றது, தவறுகள் நிகழ்வதில்லை.

அமைதி அலைகளைப் பரப்புங்கள்

முக்கியமான அம்சம் என்னவென்றால், நமது சூழலில் தாக்கத்தினை ஏற்படுத்தும் திறன் நமக்கு இருக்கின்றது. ஓர் சண்டை நடந்த அறைக்குள் செல்லும்போது, நமக்கு சற்று சங்கடமாக இருக்கின்றது. அதே நேரம், ஓர் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் அறைக்குள் செல்லும்போது நாம் களைப்பாக இருந்தாலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மைப் பற்றிக் கொள்கின்றன.அது போன்று கொந்தளிப்பான நிலைமையிலும் நமக்கு உள் மன அமைதி இருந்தால், நம்மால் அமைதி அதிர்வலைகளைப் பரப்பி கொந்தளிப்பினைக் குறைக்க முடியும்.தினமும் சில நிமிஷங்கள் செய்யும் தியானம் எந்த நிலைமையிலும் நம்மை அமைதியாக வைத்திருக்கும்.

தியானம்

  1. எந்த நிலைமையையும் புன்முறுவலுடன் எதிர்கொள்ளும் மன வலிமையைத் தருகின்றது.
  2. உங்களை உள்ள அமைதியுடன் வைக்கின்றது
  3. அதை வெளிப்புற சூழலிலும் பிரதிபலிக்கச் செய்கின்றது.
  4. உணர்ச்சிகளின் பின்னடைவை அதிகப் படுத்துகின்றது.
  5. எதிர்வினையாற்றுவதைத் தடுக்கின்றது.
  6. பதிலளிக்கும் குணத்தினை அதிகரிக்கின்றது.
  7. உங்கள் மன அழுத்தத்தை பயனுள்ள வகையில் நீக்குகின்றது.

உங்களுக்காகச் சில நிமிஷங்கள்- உங்கள் தியான நேரம்

அன்றாட வேலைச் சுமையிலிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் எவ்வாறு நேரம் எடுத்துக் கொளவது என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கின்றீர்களா? காலை நேரம் சிறந்தது, நாள் முழுவதும் அமைதியாகப் பணியாற்ற இது உதவும். உங்கள் பணியிலிருந்து சற்று நேரம் எடுத்துக் கொண்டும் தியானம் செய்யலாம். உதாரணமாக உங்களுடைய மாலை நேர காபி நேரத்தில் செய்யலாம். இது உங்கள் மன அரட்டையினைச் சற்று நிறுத்தி, உங்களை இளைப்பாறச் செய்யும்.இந்த தியான நேரத்தில் உங்கள் அனுபவத்தினை அதிகரிக்க சில குறிப்புகள் இதோ.

எளிதான தியானம்- இந்தக் குறிப்புக்களைப் பின்பற்றுங்கள்

  • வசதியான சூழல்  - அமைதியான இடத்தினைத் தேர்ந்தெடுங்கள் இது உங்களை கவனச் சிதறல்களிலிருந்து காத்து ஆழ்ந்த அனுபவத்தைத் தரும்.
  • ஒழுங்காகப் பயிற்சி செய்யுங்கள் - தினமும் இரு முறை செய்வது நல்லது. அதைச் சீராகச் செய்யுங்கள். அப்போதுதான் அதன் பயன்களை கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் அனுபவிக்க முடியும்.
  • உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தியானம் செய்யுங்கள் - நெருங்கியவர்களை ஒரு குழுவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.குழுவாகவே தியானம் செய்யுங்கள். இது உங்கள் அனுபவத்தினை அதிகரிக்கும்.சீராக இடைவிடாமலும் செய்ய முடியும்.
  • தியானத்திற்கு முன் சில நீட்டுதல் பயிற்சிகளைச் செய்யுங்கள் – இது அழுத்தம் இறுக்கம் ஆகியவற்றை நீக்கும்.தியானம் மகிழ்வுடன் அமையும்.
  • உங்கள் எண்ணங்களை கவனியுங்கள் - அவற்றைத் தடுக்காதீர்கள். தியானம் முயற்சியற்றது.
  • எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள் - 10 முதல் 15 நிமிடங்கள் தியானத்தினை மேற்கொள்ள உறுதி செய்து கொள்ளுங்கள். கண்களைத் திறக்க அவசரப் படாதீர்கள்.
  • உங்கள் வயிறு நிறைந்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் – - இது நீங்கள் உறங்கிவிடாமல் தடுக்கும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரைகளிருந்து எடுக்கப் பட்டது

தொகுப்பு: திவ்யா சச்தேவ்

வரைபடம்: நிலாத்ரி தத்தா

For any suggestions or any feedback, email us at webteam.india@artofliving.or